×

சிலரின் தனிப்பட்ட பகை காரணமாக தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது: மரண தண்டனை குறித்து பர்வேஷ் முஷாரப் கருத்து

துபாய்: சிலரின் தனிப்பட்ட பகை காரணமாக தமக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளததாக பர்வேஷ் முஷாரப் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப், கடந்த 1999ம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், தனது பதவிக் காலத்தில் 2007ம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்பு சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், தனக்கு எதிரான நீதிபதிகளையும், அரசியல் தலைவர்களையும் சிறையில் அடைத்தார். கடந்த 2008ல் அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், 2013ல் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 17ம் தேதியன்று பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமத் சேத் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. இதில் 2-1 என்ற விகிதத்தில் நீதிபதிகள், முஷாரப்புக்கு அதிகபட்சமான மரண தண்டனை விதித்தனர். இதற்கிடையில், அமைலோடோசிஸ் என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக முஷாரப் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, துபாய் மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை முஷாரப் வெளியிட்டுள்ளார்.

அதில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை தொலைக்காட்சிகள் மூலம் தெரிந்துகொண்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரோ அல்லது அவரது வழக்கறிஞரோ வாதிட அனுமதிக்கப்படாத இது, முன்னெப்போதும் இல்லாத வகையிலான வழக்கு என்று அவர் கூறியுள்ளார். மேலும், சிறப்பு ஆணைய குழு ஒன்று துபாய்க்கு வருகை தந்து, தமது வாக்குமூலத்தை பதிவு செய்ய கூட தாம் பரிந்துரைத்ததாக கூறியுள்ள முஷாரப், அந்த கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும், நாட்டிற்காக தாம் செய்த சேவைகளை அங்கீகரித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், தமது சட்ட குழுவுடன் ஆலோசித்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், நீதிமன்றத்தின் இந்த முடிவு சந்தேகத்திற்குரியது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், வழக்கு விசாரணை முழுவதிலும் சட்டத்தின் மேலாதிக்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் கீழ் இந்த வழக்கை விசாரிப்பது கட்டாயமில்லை என்று கூட கூறுவேன். ஆனால், என் மீதான சிலரின் தனிப்பட்ட பகையின் காரணமாகவே இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உயர் பதவிகளில் உள்ள சிலர் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி என்னை குறிவைத்தனர், என்று அந்த வீடியோ பதிவில் முஷாரப் கூறியுள்ளார்.


Tags : Parvez Musharraf , Pakistan, Pervez Musharraf, Death Penalty, Dubai, Video
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில்...